Happy fathers day-2021|தந்தையர் தினம் -2021|தந்தையர் தின கவிதை


 இராணுவவீரனுக்கு மகளின்கவிதை


மதுரை மண்ணில் பிறந்து

இன்னுயிரை எனக்கு கொடுத்து

இவ்வுலகை அறிய வைத்த

இராணுவ வீரனாம் 

என் தந்தைக்கு 

நான் வரையும் கவி!


மண்ணிலே மகளாய் பிறந்து

அப்பன் முகத்தை முதலாய் பார்க்க

முன் இருக்க ஆசை கொண்டேன் !


பெண் பிள்ளை பிறந்ததென

கடிதாசி செய்தி  கேட்டு 

எழுத்துக்களாய் எனைக் கண்டு 

மகிழ்ந்தவர் என் தந்தை!


தொலைதூரம் தாண்டி

என் அப்பா அங்கிருக்க 

ஒருமுறை பார்த்துவிட

'ஓ 'என்று நான் அழுக

அள்ளி அணைக்க ஆசை கொண்டேன்! 


அண்ணாந்து பார்க்கையிலே

அவர் முகம் காண ஆசை கொண்டேன்! 


தவழ்ந்து தவழ்ந்து ஓட

அவர் எனை  எட்டிப்

பிடிக்க ஆசை கொண்டேன் !


கரம் பிடித்து கைகோர்த்து 

நடை பழக  ஆசை கொண்டேன்! 


காணொளியில் அவரைக் காண

கைப்பேசி அன்றில்லை !

தொலைதூர குரலைக் கேட்க

தொலைபேசி வசதி

என் வீட்டில் இல்லை! 


ஓராண்டு கழித்து 

ஒரு மாத விடுமுறையில் 

முகம் காட்டிய அவர் செல்ல

ஓடும் ரயிலில் 

ஒரு நாள் வருவார் என்று

தொடர்வண்டி சத்தத்தில்

தந்தையின் குரல் கண்டேன்!


ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்

கோலாகலத் தை கண்டேன்!

30 நாள் வருகைக்காக

300 நாள் காத்திருந்தேன் !


கைநீட்டியதை வாங்கிக் கொடுத்தவர்

எனக்காக வாங்கி கொடுத்தது

விருப்ப ஓய்வு!


ஓய்வுபெற்று என்னுடன் இருந்தவர்

ஓயாது உழைத்தார் எனக்காக!

விடுதியில் படித்த என்னை

விடாது  பார்க்க வந்தார்!


ஆசிரியராய் பணியமர்த்தி

அழகு பார்த்தார் என் தந்தை!


மழை வரும் முன்னே

மணிக்கணக்காய் காத்திருந்தார்

பள்ளி வாசலிலே குடையோடு! 


மதிய உணவு கூடையோடு

நித்தம் நித்தம் காத்திருந்தார்!


என் தந்தை உடன் இருக்க

இன்னொருவரை கரம்பிடிக்க

காலங்கள் ஓடின!


கனிவான பேச்சால்

கவர்ந்த என் தந்தை

தாத்தாவாய் உருவெடுத்தார்!


பேரனுடன் பேரானந்தமாய்

தத்தி தத்தி நடை பழக்க 

குழந்தையுடன் குதூகலமாய்

நெஞ்சிலே தவழ வைக்க

நித்தமும் நான் ரசிக்க

காலங்கள் மாறின!


இராணுவ வீரனுக்காக காத்திருந்த நாட்கள் மாறி,

சமாதியில் சத்தமில்லாமல் உறங்கினார்  ஊமையாய் 

என் அப்பா !


அப்பா!

அண்ணாந்து பார்க்கலையோ!

என் அழுகுரலும் கேட்கலையோ!


ஆராரோ பாடலையோ!

ஆயிரம் கதை சொல்லலையோ!

ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்கலையோ!


செல்ல மகளை பார்க்கலையோ!

சின்ன பேரனிடம் சிரிக்கலையோ!

தேசத்தைக் காக்கலையோ!


இரயில் வண்டியில் காணலையே!

இரவு பகலும் தூங்கலையே!  

என் கவி கேட்கலையோ!

எழுந்து வா! என் அப்பா !


காத்திருக்கிறேன் இன்றும் உன் வரவிற்காக !

மறு ஜென்மத்தில் உன் மடியில் தவழ! 


என்றும் உன் மகளாய்

வெ.சந்திராதேவி

 

 


Post a Comment

0 Comments